உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் வாழ்ந்திட உரிய இடம் கிடைத்திட வேண்டும். பெரும் ஏகபோக, கார்ப்பரேட்டுகளுக்கு அளித்தது போக எஞ்சி இருக்கும் இடம்தான் ஏழைகளுக்கு என்ற நிலைமை மாற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார்: “சென்னை மாநகரம் சுமார் 87 லட்சம் நபர்கள் வசிக்கக்கூடிய மிகப்பெரிய நகரம். இங்கே குறுகலான தெருக்கள்,அதிக நெரிசலாக அமைந்துள்ள வீடுகள் உள்ளதாலும் ,சிறிய வீடுகளில் ஆறு முதல் ஏழு நபர்கள் வரை வசித்து வருவதால் இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவிவிடுகிறது”.(தினத்தந்தி 3-6-2020).
கொரோனா நோய்த்தொற்று சென்னையில் தீவிரமா னதற்கு அதிக நெரிசலோடு வசிக்கிற மக்கள் தான் காரணம் என்று மக்கள் மீது பழி போடுகிறார் முதல்வர். மக்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக நகரங்களையும் நகர வடிவமைப்பினையும் திட்டமிடுவதில் ஆட்சியா ளர்கள் தவறி இருக்கிறார்கள் என்கிற உண்மை மறைக்கப் படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய விவாதங்கள் சுகாதாரத்துறை மட்டுமல்லாது பொருளாதாரம், அரசியல், மனோதத்துவம், சமூகம், சித்தாந்தம் என பல துறைகளில் நடைபெறுகிறது.மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கொரோனா தொற்று பன்முகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அதிக கவனம் பெறாத ஒரு துறை உள்ளது. பெரும் தொற்று நோய்களுக்கும் தற்போது நிகழ்ந்து வரும் நகரமயமாதலுக்கும் வலுவான தொடர்பு உள்ளது.
நகரங்களை மையப்படுத்தி...
கொரோனா பாதிப்பு தற்போது அதிக அளவில் நகரங்களை மையப்படுத்தி இருப்பதை காணமுடியும். பெருநகரமான சென்னையில் தினந்தோறும் பாதிப்ப டைந்தோர் எண்ணிக்கையும், இறப்புகளும் அதிகரித்து வருகிறது.உலக அளவிலும் இந்த நிலை உள்ளது. நகரங்களில் ஏன் மிக எளிதாகவும் வேகமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன? இதற்கான விடையினை கடந்த பல பத்தாண்டுகளாக நகரங்களை கட்டமைத்து வருகிற கொள்கைகளில்தான் அறிய முடியும்.
இன்றைக்கும் கூட இந்தியாவில் கிராமப்புறங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட நக ரங்களில்தான் சுமார் 80% தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.தென்னிந்தியாவில் சென்னையிலும் மேற்கு இந்தியாவில் மும்பையிலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களின் தோல்வி அப்பட்டமாக தெரிகிறது.உடனடி தலையீட்டிலும், எதிர்கால நோக்கில் செயல்படுவதிலும் குறைபாடுகள் உள்ளன.
நீண்டகாலமாக ஆளுகிற வர்க்கங்கள், நகரங்களில் சுகாதாரக் கட்டமைப்பை மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஏற்படுத்த தவறியது,இன்று மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.தற்போதும் கூட கொரோ னா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் பல, அதிக நகரமய மாதலைக் கண்டுள்ள நாடுகள். குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிற இந்த நாடுகளின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதி மக்கள் நகர்ப்புறங்களில் குடியிருக்கின்றனர்.அமெரிக்கா அதிக அளவில் நகரமயமான நாடு. ஈரான் 70% நகர்ப்புற மக்களை கொண்டிருக்கிற நாடு. சீனா 60 சத நகர்ப்புற மக்களை கொண்டிருக்கிறது.
உலகில் மிகுந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட 10 நகரங்களை ஐக்கிய நாடுகள் சபை வரிசைப்படுத்தி யுள்ளது.அதில் ஆசியாவில் ஆறு நகரங்களும் ஆப்பிரிக்காவில் மூன்றும், தென்னமெரிக்காவில் ஒரு நகரமும் வருகின்றன.இந்த நகரங்கள் அனைத்திலும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்திருக்கிறது.
தொற்றுப் பரவலின் வரலாறாகவும்...
பல ஆண்டு காலமாகவே நகரப்புறங்களில் தொற்று நோய்களின் தீவிரமும் அடுத்தடுத்த பரவலும் உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது. நகரங்களின் வரலாறு பலவிதமான தொற்றுப் பரவலின் வரலாறாகவும் இருந்து வருகிறது.
1918-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் புளு தொற்று நகர்ப்புற மக்களை வேட்டையாடியது.அமெரிக்கா வின் பிட்ஸ்பர்க், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களை சூறையாடியது.கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பன்றிக் காய்ச்சல் எபோலா, ஜிகா போன்ற வைரஸ் கிருமிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயிர்களைப் பலிவாங்கின.உயிர்ப்பலி மட்டுமல்லாது மிகப்பெரும் பொருளாதார நாசத்தையும் அவை ஏற்படுத்தின.நோய்களின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே உலகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறுவதும் நடந்து வந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடுமையான விவசாய நெருக்கடி கிராமப்புற மக்களை நகரங்களை நோக்கி விரட்டியது.ஒருபுறம் விவசாய நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசாங்கங்கள்,நகரங்களில் குடியேறும் மக்களை வெறும் உழைப்பு செலுத்தும் எந்திரங்களாக வும்,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்கும் கூட்டமாகத்தான் கண்டார்கள். அதாவது முதலாளித்துவச் சுரண்டலின் பலிகடாக்களாக உழைக்கும் மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
அந்த உழைக்கும் மக்களின் தேவையை மையமாக வைத்து,அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகளை ஆட்சியாளர்கள் திட்டமிடவில்லை. இதனால் நகரங்களில் அடர்த்தியான மக்கள் பெருக்கம் ஏற்பட்டது. அடர்த்தி அதிகம் கொண்டிருக்கிற குடிசைப் பகுதிகள் உலகம் முழுவதும் அதிகரித்தன.
ஒருபுறம் நகரங்களில் விரிவாக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் நகர்ப்புற மக்களுக்கு தேவையான வீட்டுவசதி ,போக்குவரத்து, குடிநீர், சுகாதார வசதிகள், கழிப்பிட வசதிகள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே வருகின்றன.நகரங்களின் விளிம்பில் தள்ளப்பட்டு ,அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் கொரோனா பெரும் தொற்றுக்கான மையங்களாக மாறியுள்ளன.
திட்டமிடாத நகர்ப்புற விரிவாக்கத்திற்கும், தீவிரமான தொற்றுப் பரவலுக்கும் உள்ள தொடர்பு இன்று அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.நகர்புறங்களில் மிகவும் அடர்த்தி கொண்ட பகுதிகளாக குடிசைப் பகுதிகள் அமைந்துள்ளன இவற்றில்தான் மிகவும் ஏழ்மை நிலையில் மக்களும் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பையில் இருக்கும் தாராவி குடிசை பகுதி மிகவும் மக்கள் அடர்த்தி கொண்டிருக்கிற பகுதி. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2 லட்சம் பேர் வாழக்கூடிய மிகுந்த அடர்த்தி கொண்ட குடியிருப்புகள் அங்கு உள்ளன. கொரோனா பாதிப்பும் இங்கு அதிகம். இதுபோன்று ஆசிய நாடுகள் பலவற்றில் குடிசைப் பகுதிகளின் நிலைமை உள்ளது.குடிசை வாழ் மக்களின் உழைப்பை தனது லாப வேட்டைக்கு பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவம் அந்த மக்களுக்கான குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவை களையும் கூட நிறைவேற்றவில்லை.
முதலாளித்துவ அரசுகளின் மெத்தனம்
ஸ்பானிஷ் புளூ உள்ளிட்டு கடந்தகால தொற்று பாதிப்பு மனித சமூகத்திற்கு ஏராளமான படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. பெரும் தொற்று நோய்கள் பொதுவாக சர்வதேசிய, தேசிய விமான நிலையப் போக்குவரத்தும், அடர்த்தியான மக்களும் வசிக்கும் நகரங்களில் முதலில் பரவிட துவங்கும்.உடன் தலையிட்டு கட்டுப்படுத்தவில்லை என்றால் அது பரவலாகி, ஊரகப் பகுதிகள் உள்ளிட்டு பல பகுதிகளில் பரவிடும்.ஆனால் ஆளுகிறவர்கள் அந்த படிப்பினைகளை உணர்ந்து செயல்படவில்லை. மோசமான சுகாதார கட்டமைப்பு இருக்கும் சூழலில் தொற்று தீவிரமடைந்து மக்களை பாதிக்கும் என்பது கடந்தகால அனுபவம்.
கடந்த காலங்களில் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தவறினாலும்,தொற்று பரவி,ஊரடங்கு அமலாக்குகிற சூழலில், தேவையான சுகாதார கட்டமைப்பு களை அதிவேகமாக ஏற்படுத்துவது,விரிவான பரிசோ தனைகளை தீவிரப்படுத்துவது, பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டால் தொற்று வேகத்தை கட்டுப்படுத்த முடியும். அதே பொது மக்கள், பல்வேறு அமைப்புக்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தை ஈடுபடுத்தி இப்பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக அடர்த்தி அதிகம் இருக்கும் நகரங்களில் இப்பணிகள் அசுர வேகத்தில் நடந்திருக்க வேண்டும்.இதில் இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள முதலாளித்துவ அரசுகள் அனைத்தும் மெத்தனமாக இருந்துள்ளன. இதனால் தான் இன்றைக்கு மக்களின் துயரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பு உள்ளது. தற்போதைய நகரமயமாக்கல் அணுகுமுறை முற்றிலும் மாறிட வேண்டும். உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் வாழ்ந்திட உரிய இடம் கிடைத்திட வேண்டும். பெரும் ஏகபோக,கார்ப்பரேட்டுகளுக்கு அளித்தது போக எஞ்சி இருக்கும் இடம்தான் ஏழைகளுக்கு என்ற நிலைமை மாற வேண்டும். உழைக்கும் நகர்ப்புற மக்களுக்கு சுகாதாரமான, தரமான வாழ்க்கை மேற் கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவாறு நகரமய கொள்கைகள் முற்றிலும் மாற்றிய மைக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)